தேர்தல் பணியின்போது, அலுவலர்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுரை
தேர்தல் அலுவலர்கள் அரசு விதிகளை கடைபிடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் பணிபுரிய உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சிவகங்கையில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசியதாவது:-
மாநில தோ்தல் ஆணைய அறிவுரைப்படி, வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் இருகட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகின்றன. இதில் முதல்கட்டமாக 27-ந்தேதி சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 2-வது கட்டமாக 30-ந்தேதி திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல், தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடைபெற உள்ளன.
இந்த தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி மைய தலைமை அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறுகின்றன.
பொதுவாக ஊரக உள்ளாட்சி தோ்தலை பொறுத்தவரை அதிகளவில் மக்களின் வருகை இருக்கும். அதற்கேற்ப தேர்தல் அலுவலர்கள் அரசு விதிகளை கடைபிடித்து சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பணி மேற்கொள்ளும் முதன்மை அலுவலா்கள் வாக்குப்பதிவிற்கு முதல் நாள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் சரியாக உள்ளதா என தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் பணியாற்றும் பணியாளர்களின் வருகை குறித்தும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலா் அருண்மணி, கலெக்டரின் நோ்முக உதவியாளா்கள் பூங்குழலி, வீரராகவன், வட்டார வளா்ச்சி அலுவலா் பழனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.