கோபி அருகே கார் மோதி 2 பெண்கள் சாவு: விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற என்ஜினீயர் கைது

கோபி அருகே கார் மோதி 2 பெண்கள் இறந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திவிட்டு் தப்பிச்சென்ற என்ஜினீயரை கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-15 22:45 GMT
கடத்தூர், 

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 40). இதேபோல் பொலவக்காளிபாளையம் கஸ்பா வீதியை சேர்ந்தவர் சாந்தி (53). ஜோதிமணியும், சாந்தியும் சம்பவத்தன்று கோபி செல்ல அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சாந்தி, ஜோதிமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இ்தில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜோதிமணியும், சாந்தியும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பித்து சென்றவரை வலைவீசி தேடி வந்தனர்.

மேலும் சம்பவத்தன்று போலீசார் கூகலூர், ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள கடைகள், வீடுகள் முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் பதிவாகியுள்ளதா? என சோதனை செய்தனர். அதில் விபத்தை ஏற்படுத்திய கார் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தது என்பதையும், அதன் பதிவு எண்ணையும் கண்டுபிடித்தனர்.

அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ராசிபுரம் ராமசாமி தெருவை சேர்ந்த என்ஜினீயரான ராஜேஷ் (33) என்பது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் ராஜேஷ் ஜன்னலில் ெகாசு வலை பொருத்தும் வேலை செய்து வருவதும், சம்பவத்தன்று கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வேலையை முடித்துவிட்டு கவுந்தப்பாடி நோக்கி காரில் சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதும், பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்று தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இதை அறிந்த ராஜேஷ் நேற்று முன்தினம் கோபி போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

அதன்பின்னர் அவர் கோபி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு் பாரதி பிரபா முன்பு ஆஜர்படுத்தப்பட்டர். மாஜிஸ்திரேட்டு ராஜேசை விசாரித்து 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் அவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்