விடுமுறை தினத்தையொட்டி, சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தையொட்டி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து ஆனந்தமாக குளித்தனர்.

Update: 2019-12-15 22:15 GMT
உத்தமபாளையம், 

தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வன பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.

இந்த அருவியில் குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சுருளி அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவு இருந்தது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை காரணமாக சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் 10 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தடை நீங்கிய நிலையிலும், விடுமுறை தினம் என்பதாலும் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் ஆனந்தமாக அருவியில் குளித்தனர்.

மேலும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களும் சுருளி அருவியில் குளித்தனர்.

மேலும் செய்திகள்