திருச்சியில் டயர் கடையில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

திருச்சியில் டயர் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

Update: 2019-12-15 23:15 GMT
திருச்சி,

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான பிரபல நிறுவனத்தின் டயர் கடை உள்ளது. இந்த கடையின் தரைத்தளத்தில் டயர் குடோனும், முதல் தளத்தில் டயர்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் விற்பனையும் நடந்து வந்தது.

இந்த கட்டிடத்தின் மாடியில் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கும் அறை உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் கடையின் தரைத்தளத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்தனர். இதற்கிடையில் கடையில் தீ கொழுந்து விட்டு பயங்கரமாக எரிய தொடங்கியது. இந்த தீ தரைத்தளத்தில் இருந்து முதல் தளம் மற்றும் அதன் மேல் பகுதி வரை பரவியது.

புகை மண்டலம்

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. டயர்கள் மேலும் எரிந்து அப்பகுதியே புகை மண்டலமானது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் மீனாட்சி மற்றும் அதிகாரிகள், கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 11 வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

தரைத்தளத்தின் அருகே தீயணைப்பு வீரர்கள் செல்ல முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. இருப்பினும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் எரிந்த டயர்களில் தனல் இருந்தது. அதனை முழுமையாக தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த டயர்கள் மற்றும் உபகரணங்கள், பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் வேேறதும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத மதிப்பு

தீயில் எரிந்து நாசமான பொருட்களின் சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. தீயினால் ஏற்பட்ட புகையால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை மின்தடை செய்யப்பட்டது.

தீப்பிடித்த கடையின் ஊழியர்கள் சிலர் மாடியில் தங்கி வேலைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று விடுமுறை காரணமாக ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிய பின் மாடியில் தங்காமல் தங்களது ஊருக்கு சென்று இருந்தனா. இல்ைலயெனில் அவர்கள் தீ விபத்தில் சிக்கியிருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அதிகாலை நேரம் என்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

மேலும் செய்திகள்