அதிக விபத்துகள் ஏற்படும் ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் - வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி பேட்டி

அதிக விபத்துகள் ஏற்படும் ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி கூறினார்.

Update: 2019-12-15 22:15 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை), 

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டாக மயில்வாகனன் கடந்த மாதம் பொறுப்பு ஏற்றார். ராணிப்பேட்டையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து அவர் பணியை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தற்காலிக அலுவலகம் இயங்க ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள முகமதுசுலைமான் கட்டிடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த கட்டிடத்தை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் முன்னிலை வகித்தார். வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.

பின்னர் டி.ஐ.ஜி.காமினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முழுவீச்சில் இம்மாவட்ட காவல்துறை செயல்படும். மாவட்டத்தில் இயங்க கூடிய மாவட்ட குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் விரைவில் படிப்படியாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வரும். அதுவரை தற்போது உள்ளவாறு இந்த பிரிவுகள் இயங்கும்.

போலீசார் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும். வேலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டங்களில் தான் அதிகமான போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போலீசார் பற்றாக்குறை இருந்தால் காவல்துறை தலைவர் அலுவலகம் மூலம் நிரப்பப்படும்.

புதிய மாவட்டத்தில் காவல்துறை விசாரணை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். காவல்துறையின் பணியில் எந்தவித தொய்வும் இருக்காது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் அரசு பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றது. பெண்கள், குழந்தைகள் சம்பந்தமான குற்ற வழக்குகளில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் முழுமையாக தடை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வாலாஜாவில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையில் உள்ள பெண் இன்ஸ்பெக்டர்கள், பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெண் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். 2019-ம் ஆண்டிற்குள் இந்த முகாம்கள் நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம்.

முதலில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பொதுமக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளில் தான் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.

விபத்துகளை தவிர்க்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகள் அருகில் காரணமின்றி நிற்கும் வாலிபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு வார காலத்திற்குள் இந்த நடவடிக்கையை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, மனோகரன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் -இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு பிரிவு போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்