தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,504 வழக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,504 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

Update: 2019-12-14 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக தீர்வு காணும் வகையில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 12 அமர்வுகளில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி லோகே‌‌ஷ்வரன் தலைமை தாங்கினார். இதில் மகளிர் நீதிமன்ற நீதிபதி குமார்சரவணன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சிவஞானம், 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கவுதமன், தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், சார்பு நீதிபதி மாரீசுவரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நீதிபதி அகிலா தேவி தலைமையிலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் தலைமையிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில் மொத்தம் 815 வழக்குகள் விசாரணைக்காக எடுக்கப்பட்டன. அதில் 321 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 267 சிறு வழக்குகள், 28 வங்கி வராக்கடன் வழக்குகள், 13 சிவில் வழக்குகள், 9 வாகன விபத்து வழக்குகள், 3 குடும்பநல வழக்குகள், ஒரு காசோலை மோசடி வழக்கு ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டது. அரசு வக்கீல் சந்திரசேகர், வக்கீல்கள் சங்கர் கணே‌‌ஷ், மணிகண்ட நாகராஜ், சம்பத்குமார், மகேந்திரன், பாப்புராஜ், மகேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 106 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,369 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.4 கோடியே 28 லட்சத்து 748 தீர்வு காணப்பட்டது. அதே போல் வங்கி வராக்கடன் தொடர்பாக 490 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 135 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.1 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரம் தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்