திண்டுக்கல் மலைக்கோட்டையில், கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
திண்டுக்கல் மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற, இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை உள்ளது. இந்த மலைக்கோட்டை, பல்வேறு காலக்கட்டத்தில் பல மன்னர்களால் கட்டப்பட்டது ஆகும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய மன்னர்களில் சிலர், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலைக்கோட்டையின் உச்சியில் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில், தற்போது சாமி சிலைகள் எதுவும் இல்லை. இதனால் அங்கு வழிபாடுகளும் நடத்தப்படுவது இல்லை.
மேலும் மலைக்கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பகலில் சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே மலைக்கோட்டையில் இருக்கும் கோவிலில் மீண்டும் அபிராமி அம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் திருக்கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றவும் முயற்சி நடக்கிறது. அதற்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை.
இந்த நிலையில் நேற்று திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்க, மலை க்கோட்டை முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே இந்து மக்கள் கட்சியினர், மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கேட்டு திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
ஆனால், மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையிலான அந்த கட்சியினர் நேற்று, திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை உள்ளிட்ட பொருட்களுடன், மலைக்கோட்டையை நோக்கி அவர்கள் புறப்பட்டனர். உடனே போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதி இல்லாமல் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்றதாக அந்த கட்சியை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.