600 ஆண்டுகள் பழமையான யானை, புலி குத்திப்பட்டான் நடுகற்கள் கண்டெடுப்பு

600 ஆண்டுகள் பழமையான யானை குத்திப்பட்டான் மற்றும் புலி குத்திப்பட்டான் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2019-12-10 22:15 GMT
திருப்பூர், 

இந்தியாவில் யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கொங்கு மண்டலமும் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் வடசித்தூரில் உள்ள டாக்டர் சுரேந்திரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ரா.குமரவேல், ந.சுதாகர், க.பொன்னுச்சாமி, சு.வேலுச்சாமி மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்கே அமைந்துள்ள "கல்லாபுரத்தில்" சுமார் 600 ஆண்டுகள் பழமையான அரிதான யானை குத்திப்பட்டான் நடுகல் ஒன்றையும், புலிகுத்திப்பட்டான் நடுகல் ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.

இது பற்றி ஆய்வு மைய இயக்குனர் என்ஜினீயர் சு.ரவிக்குமார் கூறியதாவது:-

பழந்தமிழகத்தில் நாடு காவல் பணி செய்து நல்லறம் பேணி நானிலம் போற்ற வாழ்ந்து மடிந்த வீரமறவர்களுக்கு வீரநடுகற்கள் எடுத்து அந்த மாவீரர் ஆன்மாவுக்குப் படையல் செய்து வழிபட்டு வந்துள்ளனர். அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூற்றுப் பாடல்கள் நடுகல் வழிபாட்டிற்கும் முல்லைநில மக்களுக்கும் இடையிலான தொடர்பினை எடுத்துக்காட்டுகின்றன. நடுகல் வீரன் வளத்தையும், மகப்பேறினையும் கொடுக்கும் சக்தி உடையவன் என்ற நம்பிக்கை பண்டைய நாளில் இருந்து தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அதேபோல் நடுகற்கள் நடப்படும் இடம் பற்றியும் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளன. இலக்கியத்தில் நடுகல் இருப்பிட்டத்தை குறிப்பிடும்போது ஆற்றங்கரை, பெருவழி, சந்தி, ஊர்ப்புறம் என பெயர் சூட்டப்பட்டுள்ளன. இங்கு நமக்குக் கிடைத்துள்ள நடுகற்கள் இரண்டும், மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ளதால் இது பண்டைய "சந்தி வழிபாட்டு முறைக்கு" ஒரு சிறந்த சான்றாக விளங்குகின்றது.

தமிழகத்தில் இதுவரை ஒரு சில யானை குத்திப்பட்டான் நடுகற்கள் மட்டுமே கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் புகும் யானையைத் தடுத்து அவ்வூரில் உள்ள பயிர்கள், கால்நடைச் செல்வங்கள் மற்றும் மனித உயிர்களைக் காப்பதற்காகப் பண்டைய காலத்தில் வீரர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். யானையுடன் நடக்கும் இப்போரில் வீரமரணம் அடையும் வீரனின் நினைவாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எடுக்கப்படும் நடுகற்கள் யானை குத்திப்பட்டான் நடுகற்கள் என அழைக்கப்படுகின்றன.

இங்கு கிடைத்துள்ள நடுகல் 60 செ.மீ அகலமும், 70 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதில் உள்ள வீரன் தன் வலது கையில் குறுவாளும், இடது கையில் கேடயமும் வைத்து யானையை திரும்பித்தாக்கும் வகையில் தன் இடது காலை முன்வைத்து வலது காலைப் பின் வைத்த வண்ணம் உள்ளார். வீரனைத் தாக்கும் யானையின் துதிக்கை வீரனின் தலைக்கு மேலும் யானையின் தந்தம் வீரனின் இடது தோள்பட்டையைக் குத்தியபடியும் உள்ளது.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கால்நடைகளே அம்மக்களின் பெருஞ்செல்வமாக விளங்கின. கால்நடைகளைத் தனக்கு உணவாக உட்கொள்ள வரும் புலியுடன் போரிட்டு வீரமரணம் அடையும் வீரனின் நினைவாக எடுக்கப்படும் நடுகற்கள் புலிக்குத்திப்பட்டான் நடுகற்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது இங்கு கிடைத்துள்ள நடுகல் 60 செ.மீ அகலமும் 70 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதில் உள்ள மாவீரன் தன் வலது கையில் உள்ள குறுவாள் மூலம் புலியின் கழுத்துப்பகுதியைக் குத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புலியின் வால் மேல்நோக்கி உள்ளது. புலியின் வலது முன்னங்கால் தன்னைத் தாக்கும் வீரனின் தலையைத் தாக்கும் வண்ணமும் இடது முன்னங்கால் வீரனின் குறுவாளைத் தடுக்கும் வகையிலும் உள்ளது.

இந்த 2 நடுகற்களிலும் வீரர்களின் அள்ளி முடிந்த குடுமி நேராக உள்ள வண்ணமும், இடையில் மட்டும் ஆடை அணிந்து கை, கால், காது மற்றும் கழுத்துப் பகுதியில் அணிகலன்கள் அணிந்துள்ளனர். எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்த 2 நடுகற்களின் சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை 600 ஆண்டுகள் பழமையானவை எனத்தெரிகிறது..

இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்