கடலூரில் 1 கிலோ வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை, அதிரடி விலை குறைவால் போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்

கடலூரில் 1 கிலோ வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த அதிரடி விலை குறைவால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கினர்.

Update: 2019-12-10 23:00 GMT
கடலூர்,

விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பல்லாரி, சாம்பார் வெங்காயம் வரத்து முற்றிலும் குறைந்து போனது.

இதன் காரணமாக வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடலூரில் செப்டம்பர் மாதத்தில் இருந்து விலை உயரத்தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக பல்லாரி(பெரியது) ஒரு கிலோ ரூ.180-க்கும், பல்லாரி (நடுத்தரம்) ரூ.160-க்கும், பல்லாரி (சிறியது) ரூ.120-க்கும் விற்பனையானது.

அதே போல் ஆகஸ்டு மாதத்தில் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பார் வெங்காயம், தற்போது ரூ.200-க்கு விற்பனையானது. இதனால் வெங்காயம் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இந்தநிலையில் கடலூரில் நேற்று வெங்காயம் விலை அதிரடியாக குறைந்திருந்தது. மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஒரு கிலோ பல்லாரி (பெரியது) வெங்காயம் ரூ.140-க்கும், நடுத்தரம் ரூ.100-க்கும், சிறிய வெங்காயம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சாம்பார் வெங்காயம் ரூ.150-க்கு விற்பனையானது.அதேவேளையில் பான்பரி மார்க்கெட்டில் உள்ள மொத்த காய்கறி விற்பனை கடையில் ஒரு கிலோ பல்லாரி (சிறியது) வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் நடுத்தர வெங்காயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. சாம்பார் வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த அதிரடி விலை குறைப்பால் வெங்காயத்தை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். ½ கிலோ கூட வாங்க முடியாமல் இருந்த பொதுமக்கள் நேற்று 2, 3 கிலோ வரை வாங்கி சென்றதை காண முடிந்தது.

இந்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அந்த கடையில் குவிந்தனர்.

3 டன் வெங்காயம் விற்பனைக்காக வைக்கப்பட்டது. ஆனால் விற்பனை தொடங்கியதும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றதால், 3 டன் வெங்காயமும் ½ மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டது.

வெங்காயம் விலை குறைந்தது பற்றி கடை உரிமையாளர் பக்கிரான் கூறுகையில், “ பெங்களூருவில் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக வரத்து அதிகரித்தது. இதனால் பல்லாரி (சிறியது) வெங்காயம் ரூ.25-க்கும், நடுத்தர வெங்காயம் ரூ.60-க்கும் விற்பனை செய்தோம்.

வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வருகிறது. இதனால் வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், அதை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர். இதன் மூலமாகவும் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்