கோவையில், குடியுரிமை சட்ட திருத்த நகலை எரிக்க முயற்சி - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 63 பேர் கைது

கோவையில் குடியுரிமை சட்ட திருத்த நகலை எரிக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-10 22:30 GMT
கோவை,

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், அதை சட்டமாக்க கூடாது என்று வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இஷாக், அன்சர் செரீப்,டி.சிவக்குமார், அப்துல்காதர், உசேன், அப்பாஸ், இக்பால், உமர்செரீப், செய்யது இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எரிக்க முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

இந்த போராட்டம் குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாடாக நடத்தக்கூடாது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் மதபாகுபாட்டிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் உள்ளது. முஸ்லிம்களுக்கும், ஈழ தமிழர்களுக்கும் இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்திய முஸ்லிம்களை 2-ம் தர குடிமக்களாக மாற்ற இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்