நீலகிரி மாவட்டத்தில், 2-வது நாளில் 8 பேர் வேட்புமனுதாக்கல்
நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளில் நேற்று 8 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒரு மாவட்ட ஊராட்சி, 35 கிராம ஊராட்சிகள் உள்ளது. நீலகிரியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய என மொத்தம் 493 பதவி இடங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.
அதற்கான படிவங்களை சிலர் வாங்கி சென்று உள்ளனர். ஆனால், வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. படிவம் வாங்க வருகிறவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் தேர்தல் நடக்குமா என்று கேள்வி எழுப்பிய பின்னரே படிவங்களை வாங்குகின்றனர். நேற்று மாலை 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. இதனால் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் முன்புறம் வெறிச்சோடி இருந்தது.
நேற்று முன்தினம் நீலகிரியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5 பேர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் அரக்கோடு ஊராட்சி தலைவர் பதவிக்கு சிந்தாமணி உள்பட மொத்தம் 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 2-வது நாளான நேற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 7 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1 ஒருவரும் என மொத்தம் 8 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு அந்தந்த கிராம ஊராட்சிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். இதனால் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டாததால் களையிழந்த நிலையில் காணப்படுகிறது.