உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 100 பேர் வேட்புமனு தாக்கல்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு நேற்று முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
ஈரோடு,
14 ஒன்றியக்குழு அலுவலகங்கள், 225 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேற்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பெற தயாராக இருந்தனர்.
மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவிகள் 19, ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிகள் 183, ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் 225, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள் 2 ஆயிரத்து 97 என 2 ஆயிரத்து 524 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. நேற்று 5 மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஆனால் மிகக்குறைந்த அளவிலேயே ஆங்காங்கே வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர். கிராம ஊராட்சி வார்டுகளுக்கு மொத்தம் 95 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
ஒன்றியம் வாரியாக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
ஈரோடு -1
மொடக்குறிச்சி - 1
கொடுமுடி - இல்லை
பெருந்துறை - 7
சென்னிமலை - 7
அம்மாபேட்டை - 19
அந்தியூர் - 9
பவானி - 2
கோபி - 1
நம்பியூர் - 24
டி.என்.பாளையம் - 1
சத்தியமங்கலம் - 9
பவானிசாகர் - 10
தாளவாடி - 4
இவ்வாறு 14 ஒன்றியங்களிலும் 95 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அம்மாபேட்டை ஒன்றியத்தில் 2 பேர், பவானி ஒன்றியத்தில் ஒருவர், கோபி ஒன்றியத்தில் ஒருவர் என மொத்தம் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு அந்தியூர் ஒன்றியத்தில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 100 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.