வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர், கலெக்டரிடம் மனு

வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2019-12-09 22:30 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளித்தனர்.

கூட்டத்தில் இலவச வீடு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட 242 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சண்முகசுந்தரம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

வேலூர் விரிஞ்சிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து தினமும் லாரிகள், மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது. அதன் காரணமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய்கள் வெளியே தெரிகின்றன. சிலர் பாலாற்றை ஆக்கிரமித்து மணல் அள்ள பணம் வசூலிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நாம் தமிழர் கட்சி வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் கோபி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், வேலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. அவற்றால் பல்வேறு சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். விருபாட்சிபுரம் பகுதியில் கால்வாய் உடைந்து கழிவுநீர் அப்பகுதியில் உள்ள குளத்தில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வேலூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் தேங்கியுள்ள கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றை அகற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேசுதலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி மற்றும் தகவல் மொழி பரிமாற்றத்திற்கான மென்பொருளுடன் கூடிய கையடக்க கணினியும், சர்வதேச திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின்கீழ் கட்டாய உடற்தகுதி திறனாய்வு தேர்வுகள் பள்ளிகளில் நடந்து வருகிறது. அதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் பட்டியலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காமராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபிஇந்திரா உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்