பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து ஆர்.எஸ்.எஸ். பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து ஆர்.எஸ்.எஸ். பெண்கள் அமைப்பு (ராஷ்டிர சேவிகா சமிதி) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-12-09 23:00 GMT
சென்னை,

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்.எஸ்.எஸ். பெண்கள் அமைப்பு (ராஷ்டிர சேவிகா சமிதி) சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, ஆர்.எஸ்.எஸ். பெண்கள் அமைப்பின் மாநில செயலாளர் கோமதி நவீன் தலைமை தாங்கினார். சென்னை மாநகர செயலாளர் வித்யா ஸ்ரீதர், மாநில சேவா அதிகாரி பத்மா ரங்கன் உள்பட அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசும்போது, “பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்ஜாமீன் பெறமுடியாத வகையில் சட்டங்களை அரசு கொண்டுவரவேண்டும். குடும்பமும், சமுதாயமும் பாதுகாப்பாக இருந்தால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு கிடைக்கும். உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் பெண்கள் பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் ரவிக்குமார், பா.ஜ.க. தென் சென்னை மாவட்ட செயலாளர் சரளா, சென்னை மாநகர மகளிரணி செயலாளர் சந்தானலட்சுமி, ஆலயம் செல்வோர் இயக்கத்தின் துணை தலைவர் உமா ஆனந்த் உள்பட பா.ஜ.க., விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்