மணல் கடத்தலை தடுத்ததால் போலீசார் மீது டிராக்டரை ஏற்ற முயற்சி - ஒருவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

சிப்காட் அருகே மணல்கடத்தலை தடுத்தபோது போலீசார் மீது டிராக்டரை ஏற்ற முயன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2019-12-08 22:30 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை சிப்காட்டை அடுத்த பள்ளேரி அருகே பொன்னையாற்றில் இருந்து சிலர் மணல் கடத்துவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் தலைமையில் போலீசார் பொன்னையாற்று பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது பதிவு எண் இல்லாத டிராக்டர் ஒன்றில் சிலர் மணல் ஏற்றி வந்தனர்.

பள்ளேரி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அந்த டிராக்டரை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் டிராக்டரில் வந்தவர்கள் போலீசாரை கொலை செய்யும் நோக்கில் அவர்கள் மீது டிராக்டரை ஏற்ற முயன்றனர். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விலகிக்கொண்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பின்னர் சுதாரித்துக்கொண்ட போலீசார் டிராக்டரை துரத்திச்சென்று மடக்கினர். அதற்குள் அதில் இருந்து 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர். மேல்பள்ளேரி கிராமத்தை சேர்ந்த பிரபு (வயது 24) என்பவரை போலீசார் பிடித்துக்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்கள் எரும்பி பகுதியை சேர்ந்த டிரைவர் மணி, ரெண்டாடியை சேர்ந்த சீனு என்ற சீனிவாசன் என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்