அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க கூட்டம் அலைமோதியது.

Update: 2019-12-08 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தி, கானாங்கெழுத்தி, இறால், கனவா, திருக்கை, பாறை, துள்ளுகெண்டை, வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள், ஏராளமான நண்டுகள் கடலில் இருந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 26-ந்தேதி கடல் சீற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடல் சீற்றம் குறைந்தது. இதையடுத்து ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்.

மீன் வாங்க அலைமோதிய கூட்டம்

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கரை திரும்பிய மீனவர்களின் வலைகளில் சங்கரா, திருக்கை, கானாங்கெழுத்தி, வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு மீன்கள் சிக்கின. இதனால் அதிகாலை முதலே ஏலக்கூடத்தில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

கடந்த மாதம் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், நாகை மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. இதையடுத்து ஒருவாரத்துக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தொடர்ந்து கரை திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். இதேபோல 4 முதல் 8 நாட்கள் வரை ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கரை திரும்பி கொண்டு இருக்கின்றனர். கடல் சீற்றம் காரணமாக வஞ்சிரம், இறால் உள்ளிட்ட ஏற்றுமதி செய்யப்படும் விலை உயர்ந்த மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்காமல் இருந்தது.

டீசல் விலை உயர்வு

இந்தநிலையில் இன்று (நேற்று) கரை திரும்பிய ஆழ்கடல் தொழில் செய்யும் விசைப்படகு மீனவர்களின் வலைகளில் பெரும்பாலான படகுகளில் வஞ்சிரம் சிக்கியுள்ளது. தற்போது வஞ்சிரம் மீனின் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் டீசல் விலை உயர்வால் போதுமான விலை கிடைக்கவில்லை. மேலும் கார்த்திகை மாதம் என்பதால் மீன் விலையில் ஏதும் மாற்றம் இல்லை. வஞ்சிரம் கிலோ ரூ.750-க்கும், வலைமீன் ரூ.300-க்கும், சங்கரா ரூ.250-க்கும், கானாங்கெழுத்தி ரூ.100-க்கும், திருக்கை ரூ.100-ல் இருந்து 120-க்கும் விற்பனை செய்யப் படுகிறது.

மேலும் செய்திகள்