அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியுடன் கர்ப்பிணிகளுக்கான இரும்பு சத்து மருந்துகளை கடத்திய தொழிலாளி

திருப்பூரில் கர்ப்பிணிகளுக்கான இரும்பு சத்து மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியுடன் கடத்தி சென்ற தொழிலாளியை கம்யூனிஸ்டு கட்சியினர் சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தென்னை மரங்களுக்கு ஊற்றுவதற்காக கொண்டு சென்றதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-08 23:00 GMT
அனுப்பர்பாளையம், 

திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என்.கார்டன் பகுதியில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுகாதார நிலையத்தின் வாசலில் 2 அட்டை பெட்டிகளில் மருந்து பாட்டில்கள் இருந்தன. இந்த மருந்து பாட்டில்கள் குறித்து அந்த பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள், அந்த சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றும் தனலட்சுமி என்பவரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அந்த மருந்து பாட்டில்கள் வாவிபாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு வைத்து இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனலட்சுமி கூறியது கம்யூனிஸ்டு கட்சியினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் மருந்து பாட்டில்கள் இருந்த 2 பெட்டிகளையும் ஒரு ஆசாமி மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அவரை பின் தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது அந்த ஆசாமி வாவிபாளையம் சுகாதார நிலையத்திற்கு செல்லாமல் பூண்டி ரிங் ரோட்டில் சென்று பின்னர் அங்கிருந்து அங்கேரிபாளையம் ரோட்டில் சென்றுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அந்த ஆசாமியை சிறைபிடித்தனர். அந்த மருந்து பாட்டில்கள் குறித்து அவரிடம் கட்சி நிர்வாகிகள் கேட்டபோது, அந்த மருந்து பாட்டில்களை தென்னை மரங்களுக்கு மருந்தாக ஊற்றுவதற்காக செவிலியர் தனலட்சுமி கொடுத்ததாக கூறியதால் திடுக்கிட்டனர். பின்னர் அந்த ஆசாமியை பிடித்துச்சென்று அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த ஆசாமி கோவை சீதாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், தெரியவந்தது. பின்னர் அந்த பெட்டியை பிரித்து அதில் இருந்த மருந்து பாட்டில்களை போலீசார் பார்வையிட்டனர். அதில் சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 100 மி.லி. இரும்பு சத்து மருந்து பாட்டில்கள் (அயர்ன் அண்டு போலிக் ஆசிட் சிரப் ஐபி) 200 இருந்தது. மேலும் அந்த மருந்து இந்த மாதத்துடன் (டிசம்பர்) காலாவதியாக இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக செவிலியர் தனலட்சுமியை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர், துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள் எங்கள் சுகாதார நிலையத்தில் இருந்து மருந்துகளை எடுத்து சென்று அவர்கள் பணியாற்றும் நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை எடுத்து செல்வதற்கு கஷ்டப்படுவதால் மருந்து பாட்டில்கள் அனைத்தும் எங்கள் சுகாதார நிலையத்திலேயே தேங்கி விட்டது என்று கூறினார்.

தொடக்கத்தில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியிடம் தனலட்சுமி வாவிபாளையம் துணை சுகாதார நிலையத்திற்கு மருந்து பாட்டில்கள் கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டுள்ளது என்றும், செவிலியர்கள் மருந்து பாட்டில்களை எடுத்து செல்லாததால் தேங்கி விட்டது என்று பல்வேறு காரணங்களை கூறி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் குழப்பமடைந்தனர். மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதுதான் சரி என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

திருப்பூரில் நெருப்பெரிச்சல் உள்பட பல்வேறு சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் அவசரத்திற்கு சென்று மருந்து கேட்டால், அங்குள்ள செவிலியர்கள் மருந்து இருப்பு இல்லை என்று கூறுவது வழக்கம். இதுதொடர்பாக பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுபோன்று மருந்து பாட்டில்கள் மொத்தமாக வெளியில் கடத்தி செல்லப்படுவதற்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். இதேபோல் அனைத்து சுகாதார நிலையங்களிலும் டாக்டர், செவிலியர்களை போதிய அளவில் நியமிப்பதுடன், நோயாளிகளுக்கான மருந்து, மாத்திரைகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். திருப்பூரில் சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருந்து பாட்டில்களை வெளிநபர் ஒருவர் மொத்தமாக எடுத்து சென்றபோது சிறைபிடிக்கப்பட்டு, போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்