பெங்களூருவில் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை தொட்டது பொதுமக்கள் பெரும் பாதிப்பு
பெங்களூருவில் வெங்காய விலை கிலோ 200 ரூபாயை தொட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் வெங்காய விலை கிலோ 200 ரூபாயை தொட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
சாம்பாரில் வெங்காயம்
சமையலில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயம் இல்லாமல் சாம்பார் தயாரிப்பது என்பது மிக கடினம். இந்த நிலையில் கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை விண்ணை தொட்டு வருகிறது. கிலோ 30 ரூபாயில் இருந்த வெங்காயம் தற்போது பல்வேறு மாநிலங்களில் ரூ.200-ஐ தொட்டுவிட்டது. அதேபோல் பெங்களூருவில் வெங்காய விலை 200 ரூபாயை தொட்டுள்ளது.
வெங்காய விலை உயர்வால், ஏழை, நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகளில் சாம்பாரில் வெங்காயம் சேர்ப்பதை நிறுத்திவிட்டனர். ஓட்டல்களிலும் வெங்காயம் பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துவிட்டனர். இதுகுறித்து கர்நாடக அரசின் வேளாண்மை சந்தைத்துறை அதிகாரி சித்தகங்கையா கூறியதாவது:-
இருப்பு இல்லை
பெங்களூருவில் சில சில்லறை கடைகளில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200-ஐ தொட்டுவிட்டது. வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு ஜனவரி மாதம் வரை அப்படியே நீடிக்கும். வட கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் வெங்காய சாகுபடி 50 சதவீதம் குறைந்துவிட்டது.
சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளிடம் வெங்காயம் இருப்பு இல்லை. கர்நாடகத்தில் வெங்காயத்தை இருப்பு வைக்க தேவையான வசதிகள் இல்லை. கர்நாடகத்தில் மட்டும் ஆண்டுக்கு 20.19 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு மழை மற்றும் வெள்ள பாதிப்பால் 50 சதவீதம் குறைந்துவிட்டது.
இவ்வாறு சித்தகங்கையா கூறினார்.
கட்டுப்படுத்தப்பட்டது
வேளாண்மை உற்பத்தி சந்தை குழு, ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதில் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமையிலும் வெங்காய வியாபாரம் நடைபெறும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டும் இதே போல் வெங்காய விலை உயர்ந்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே அவை கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.