பெண் கடத்தல் புகாரால் வேலை மறுக்கப்பட்டவருக்கு சிறை வார்டன் பணி வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பெண் கடத்தல் புகாரால் வேலை மறுக்கப்பட்டவருக்கு சிறை வார்டன் பணி வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-07 22:30 GMT
மதுரை, 

சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த முத்துராசு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் காலியாக இருந்த இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் பணி நியமனங்களுக்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டில் வெளியானது. இதற்கு நான் விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வு, உடல் தகுதித்தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்று சிறை வார்டன் பணிக்கு தேர்வானேன்.

பணி நியமனத்திற்கு முன்பு நடந்த போலீசாரின் விசாரணையில் மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை கடத்தியதாக வழக்கு பதிவாகி உள்ளதாகவும், இதை நான் விண்ணப்பத்தில் மறைத்ததாகவும் கூறி எனக்கு பணி வழங்க மறுத்துவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கடந்த 9.2.2017 அன்று விண்ணப்பித்தார். ஆனால், கடந்த 23.6.2017-ல் தான் அவர் மீது வழக்கு பதிவானது. இதில், எப்படி மனுதாரர் உண்மையை மறைத்தார் என கூற முடியும். தற்போது அந்த புகாரில் முகாந்திரம் இல்லையென கூறி வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. கடத்தியதாக கூறப்படும் பெண்ணுடன் மனுதாரர் திருமணம் செய்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார், என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கடத்தியதாக கூறப்படும் பெண் கடந்த 13.10.2017-ல் வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டு முன் ஆஜராகி தான் கடத்தப்படவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார். மனுதாரர் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே, மனுதாரருக்கு பணி வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. பணி வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை 4 வாரத்திற்குள் ஜெயில் வார்டனாக, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. நியமிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்