புனேயில் 2-வது நாளாக நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

புனேயில் நேற்று 2-வது நாளாக நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

Update: 2019-12-08 00:00 GMT
புனே, 

புனேயில் நேற்று 2-வது நாளாக நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு

மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதாறும் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான 3 நாள் மாநாடு புனே நகரின் பாஷன் பகுதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் அனைத்து மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

பிரதமர் மோடி பங்கேற்பு

இந்த நிலையில், போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு பிரதமர் நரேந்திர மோடி புனே வந்தார். புனே விமான நிலையத்தில் அவரை மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வரவேற்றார்.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். இதில் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து பேசினார்.

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொடிநாள் நன்கொடை

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி புனே கவர்னர் மாளிகையில் நடந்த ஆயுதப்படைகளின் கொடிநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நன்கொடை வழங்கினார்.

அப்போது, 2016-ம் ஆண்டு காஷ்மீர் நக்ரோட்டா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மராட்டியத்தை சேர்ந்த மேஜர் குணால் கோசவியின் மனைவி மற்றும் மகளை மோடி சந்தித்தார்.

இதற்கிடையே ஆயுதப்படைகளின் கொடி நாள் தொடர்பான 57 நிமிட வீடியோவை பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டார். அதில், “ஆயுதப்படைகளின் கொடி நாளில் நமது படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தைரியத்தை வணங்குகிறோம். நமது படைகளின் நலனுக்காக பங்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்து இருந்தார்.

மேலும் செய்திகள்