எட்டயபுரத்தில் பஸ்-லோடு ஆட்டோ மோதல்; 3 பேர் காயம் 10 ஆடுகள் சாவு

எட்டயபுரத்தில் பஸ்-லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் லோடு ஆட்டோவில் இருந்த 10 ஆடுகளும் இறந்தன.

Update: 2019-12-07 22:15 GMT
எட்டயபுரம், 

எட்டயபுரத்தில் பஸ்-லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் லோடு ஆட்டோவில் இருந்த 10 ஆடுகளும் இறந்தன.

ஆடுகள் விற்க சென்றபோது...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தோப்புநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 66). இவர் தனது வீட்டில் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று அதிகாலையில் சில ஆடுகளை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெறும் வாரச்சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக சுப்புராஜ் 28 ஆடுகளை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு எட்டயபுரத்துக்கு புறப்பட்டார். அப்பகுதியைச் சேர்ந்த சீனியப்பன் மகன் ராமர் (27) லோடு ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அவர்களுடன் லோடு ஆட்டோவில் அதே ஊரைச் சேர்ந்த அழகுராஜா (40), கருணசேகரன் (37) ஆகியோரும் சென்றனர்.

10 ஆடுகள் சாவு

எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகில் நாற்கர சாலையில் சென்றபோது, கோவையில் இருந்து சாத்தான்குளத்துக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோவின் பின்னால் மோதியது. இதில் நிலைதடுமாறிய லோடு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் இருந்த சுப்புராஜ், அழகுராஜா, கருணசேகரன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் இருந்த 10 ஆடுகளும் இறந்தன.

டிரைவரிடம் விசாரணை

லோடு ஆட்டோவின் மீது மோதிய ஆம்னி பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் பஸ்சில் இருந்த 39 பயணிகளும் அதிர்‌‌ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பஸ் டிரைவரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்குமாரிடம் (27) விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்