பிப்ரவரி 5-ந் தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவில் மூலவர் கோபுரத்தில் சாரம் அமைக்கும் பணி

தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி மூலவர் கோபுரத்தில் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.;

Update:2019-12-08 04:15 IST
தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டி தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது.

இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது. இதற்காக கோபுரங்கள் தூய்மைப்படுத்துதல், சிதிலமடைந்த சிற்பங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. முருகன் சன்னதி முன்புள்ள மண்டபத்தை தொழிலாளர்கள் நேற்று சுத்தம் செய்தனர்.

புதிய சாலை

கும்பாபிஷேகத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் சிவகங்கை பூங்கா வளாகத்தில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பூங்காவின் வழியாகவே பெரியகோவிலுக்கு செல்லும் வகையில் பூங்காவின் சுவர்களை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜை நடக்கிறது. இங்கே பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக சிவகங்கை பூங்கா நுழைவு வாயில் முதல் பெத்தண்ணன் கலையரங்கம் வரை புதிய சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஏற்கனவே போடப்பட்டுள்ள தார்சாலையை பொக்லின் எந்திரம் மூலம் பெயர்த்து அப்புறப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. கும்பாபிஷேக தினத்தன்று யாகசாலையில் வைக்கப்படும் புனிதநீர் நிரம்பிய குடத்தை சிவாச்சாரியார்கள் எடுத்து கொண்டு மூலவர் கோபுர உச்சிக்கு செல்லும் வகையில் தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மூலவர் கோபுரத்தில் இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்புகள்

சிவகங்கை பூங்கா நுழைவு பகுதியில் பக்தர்கள் கோவிலுக்குள் வந்து செல்வதற்கு வசதியாக புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களை எந்தந்த வழியில் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இதற்காக எங்கெல்லாம் கட்டைகள், கம்பிகளால் தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும் என வரைபடம் தயாரிப்பதற்காக டேப் மூலம் அளவிடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பெத்தண்ணன் கலையரங்கம் எதிரே பாழடைந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகள், சிறிய மரங்களை தொழிலாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தஞ்சை சிவகங்கை பூங்காவின் சுற்றுச்சுவர் சில இடங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அதேபோல் மாவட்ட கல்வி அலுவலக வளாக சுவரும் விரிசல் விழுந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சுவர்களை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்