எட்டயபுரம் அருகே விபத்து சட்டக்கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம் கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது
எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.;
எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
சட்டக்கல்லூரி மாணவர்
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவருடைய மகன் தினேஷ் (வயது 24). இவர் ஆந்திர மாநிலம் திருப்பதி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். சென்னை திரு.வி.க. நகர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் விக்னேஷ் (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும், தூத்துக்குடியில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள காரில் சென்றனர்.
பின்னர் நேற்று மதியம் அவர்கள் தூத்துக்குடியில் இருந்து காரில் சென்னைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தினேஷ் காரை ஓட்டினார்.
கன்டெய்னர் லாரி-கார் மோதல்
எட்டயபுரம் அருகே எம்.கோட்டூர் விலக்கு அருகில் சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் மீது எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் இருந்த தினேஷ், விக்னேஷ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அவர்களை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டிரைவரிடம் விசாரணை
இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவரான கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் சுடலைமணியிடம் (26) விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து ஆம்பூருக்கு காலணி லோடு ஏற்றுவதற்காக கன்டெய்னர் லாரி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.