கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த 5 மாவட்ட போலீசாருக்கு பாராட்டு

கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த 5 மாவட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.;

Update: 2019-12-07 23:00 GMT
திருச்சி,

திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல்துறை புலனாய்வுஅதிகாரிகள், கோர்ட்டு பணி பார்க்கும் போலீசார், அரசு வக்கீல்கள், வழக்கின் சாட்சிகள் ஆகியோருக்கு பாராட்டு விழா சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் திருச்சி சரகத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களில் 2019-ம் ஆண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்ட 17 வழக்குகளின் புலனாய்வு அதிகாரிகள் 17 பேரையும், கோர்ட்டு போலீசார் 17 பேரையும் பாராட்டி அவர் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், அரசு வக்கீல்கள், அச்சுறுத்தல்களுக்கும் பயப்படாமல் சாட்சியம் அளித்த பொதுமக்களையும் அவர் பாராட்டினார். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மற்றும் அரசு வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

2-ம் கட்ட விசாரணை

பின்னர், டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி சரகத்தில் ஒரு வருடத்தில் 90 முதல் 100 கொலை வழக்குகள் பதிவாகிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு தண்டனை பெற்று தந்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் தண்டனை பெற்று தந்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்.

பாய்லர்ஆலை வங்கி கொள்ளை வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதுவரை 75-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம். இதில் சந்தேகத்துக்குள்ளாகி இருக்கும் ஊழியர்களிடம் மீண்டும் 2-ம் கட்ட விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்