புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள் கடும் விலை உயர்வு எதிரொலி பாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், புதுமண தம்பதிக்கு வெங்காயத்தை நண்பர்கள் பரிசளித்த ருசிகர சம்பவம் பாகல்கோட்டை அருகே அரங்கேறி உள்ளது.

Update: 2019-12-07 23:00 GMT
பாகல்கோட்டை, 

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், புதுமண தம்பதிக்கு வெங்காயத்தை நண்பர்கள் பரிசளித்த ருசிகர சம்பவம் பாகல்கோட்டை அருகே அரங்கேறி உள்ளது.

வெங்காய விலை கடும் உயர்வு

சமையலில் சுவை கூட்டு பொருளாக வெங்காயம் சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-யை தொட்டுவிட்டது. இதனால் ஓட்டல்களில் உள்ள சாப்பாடுகளில் வெங்காயத்தை அதிகமாக காண முடியவில்லை.

மேலும் வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தை மிகவும் விலையுயர்ந்த பொருளாக பாவித்து மீம்ஸ்கள், காமெடிகள், டிக்-டாக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

புதுமண தம்பதிக்கு பரிசு

இந்த நிலையில் வெங்காய விலை உயர்வால் புதுமண தம்பதிக்கு அவர்களின் நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக அளித்த சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. அதாவது பாகல்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின்போது புதுமண தம்பதிக்கு அவர்களின் நண்பர்கள் ஒரு பாக்சை பரிசாக அளித்தனர்.

அந்த பாக்சை அவர்கள் பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே வெங்காயங்கள் இருந்தன. இதை பார்த்து புதுமண ஜோடி மற்றும் திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் சிரித்தனர்.

ஆதரவு

அதேநேரத்தில் வெங்காய விலை உயர்வால் அதை தங்கநகையாக பாவித்து நண்பர்கள் பரிசளித்ததாக புதுமண ஜோடி உணர்ந்தனர். அதன்பிறகு புதுமண ஜோடி மற்றும் அவர்களின் நண்பர்கள் வெங்காய பரிசுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண ஜோடிக்கு வெங்காயம் பரிசளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்