அரசின் உத்தரவை திரும்ப பெற்று கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் முதல்-மந்திரிக்கு, டி.கே.சிவக்குமார் கடிதம்

அரசின் உத்தரவை திரும்ப பெற்று கனக புராவில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்று கோரி முதல்- மந்திரி எடியூரப்பாவுக்கு, டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-12-07 22:30 GMT
பெங்களூரு, 

அரசின் உத்தரவை திரும்ப பெற்று கனக புராவில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்று கோரி முதல்- மந்திரி எடியூரப்பாவுக்கு, டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

எடியூரப்பாவுக்கு கடிதம்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் ராமநகர் மாவட்டம் கனகபுராவில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும், கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்ற முந்தைய அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

மேலும் கனகபுராவுக்கு பதிலாக சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். அத்துடன் மருத்துவ கல்லூரி தொடங்க சிக்பள்ளாப்பூரில் அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;-

கனகபுராவில் மருத்துவ கல்லூரி

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே அறிவித்தபடி கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-மந்திரியான நீங்கள் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடமாட்டேன், மாநிலத்தில் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று கூறி இருக்கிறீர்கள்.

அதன்படி, பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல் கனகபுராவில் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும். அதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். கனகபுரா மக்களுக்கு நியாயம் கிடைக்க, அங்கு மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டியது அவசியமானதாகும். கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்க உங்களது அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் தீவிர போராட்டம் நடத்தப்படும். அதுபோன்ற சம்பவத்திற்கு நீங்கள் இடமளிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்