புனேயில் நகைக்கடை வங்கிக்கணக்கை முடக்கி ரூ.3 கோடி அபேஸ் 20 பேர் மீது வழக்குப்பதிவு
புனேயில் நகைக்கடை வங்கிக்கணக்கை முடக்கி ரூ.3 கோடி அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புனே,
புனேயில் நகைக்கடை வங்கிக்கணக்கை முடக்கி ரூ.3 கோடி அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கி செயலி முடக்கம்
புனே சின்காட் ரோட்டில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடைக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை நாள் ஆகும். இந்தநிலையில் கடந்த மாதத்தில் ஒரு திங்கட்கிழமை மர்மநபர்கள் நகைக்கடையின் வங்கி செயலியை முடக்கி உள்ளனர். பின்னர் நகைக்கடையின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.2 கோடியே 98 லட்சத்தை 20 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றினர். மேலும் அவர்கள் நகைக்கடை வங்கி செயலியின் பாஸ்வேர்டையும் மாற்றி உள்ளனர்.
இந்தநிலையில் மறுநாள் நகைக்கடை ஊழியர்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து புனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
20 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த புகார் குறித்து போலீசார் நகைக்கடை வங்கிக்கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்ட 20 வங்கி கணக்குகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்ட ரூ.18 லட்சத்து 88 ஆயிரத்தை முடக்கி வைத்து உள்ளனர்.
நகைக்கடையின் வங்கி செயலியை முடக்கி சுமார் ரூ.3 கோடி அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.