நடைமேடை தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி - ரெயில்வே ஊழியர் பலி

கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை தடுப்பு சுவரில் அமர்ந்து இருந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-06 22:45 GMT
பூந்தமல்லி,

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது 36). ரெயில்வே ஊழியரான இவர், திருப்பூர் ரெயில் நிலையத்தில் வேலை செய்து வந்தார். சென்னை பெரம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரெயில்வே தொழிற்சங்க யூனியன் ஆலோசனை கூட்டத்தில் சக தொழிலாளர்களுடன் வந்து கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு நேற்று முன்தினம் இரவு சிவகுமார், பெரம்பூரில் இருந்து மின்சார ரெயில் மூலம் கொரட்டூர் ரெயில் நிலையம் வந்தார். அங்கு நண்பருடன் ரெயில் நிலைய நடைமேடையில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது சென்னை சென்டிரலில் இருந்து பெங்களூரு நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நடைமேடையையொட்டி உள்ள தண்டவாளம் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றபோது, அதன் வேகத்தில் ஏற்பட்ட பலத்த காற்றால், அங்கு சுவரில் அமர்ந்திருந்த சிவகுமார், நிலைதடுமாறி பின்னோக்கி சாய்ந்தார்.

அப்போது அவரது தலையில் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவகுமார், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பலியான ரெயில்வே ஊழியர் சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பெரம்பூர் ரெயில்வே போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்