கட்டளைமேட்டு வாய்க்காலை ரூ.335 கோடியில் நவீனப்படுத்தும் பணி மார்ச் மாதம் தொடங்கும் - பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
கட்டளை மேட்டு வாய்க்காலை ரூ.335 கோடியில் சீரமைத்து நவீனப்படுத்தும் பணி மார்ச் மாதம் தொடங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
திருச்சி,
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் புகுந்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன வாழ்வாதாரமாகவும், பெரும்பாலான மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது காவிரி ஆறு. மேட்டூர் அணையில் தொடங்கி கல்லணை வரை 17 கிளை வாய்க்கால்கள் காவிரியில் இருந்து பிரிந்து செல்கின்றன.
இந்த 17 வாய்க்கால்களில் ஒன்று கட்டளை மேட்டு வாய்க்கால். காவிரியின் தென்கரையில் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருந்து பிரியும் இந்த கட்டளை மேட்டு வாய்க்காலின் மொத்த நீளம் 63 கி.மீ. ஆகும். இந்த வாய்க்காலின் மூலம் கரூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 185 ஏக்கர், திருச்சி மாவட்டத்தில் 3,589 ஏக்கர் என மொத்தம் 23 ஆயிரத்து 774 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
காவிரியின் துணை வடிநில படுகை, வெண்ணாறு வடிநில படுகை, கல்லணை வாய்க்கால் வடிநில பகுதி, கீழ் கொள்ளிடம் வடிநில பகுதி, கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட 7 திட்டங்களை ரூ.11 ஆயிரத்து 420 கோடியில் நிறைவேற்ற அனுமதி கேட்டு மத்திய அரசின் நீர் வள ஆணையத்திற்கு கடந்த 2012-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பியது.
இதில் கட்டளை மேட்டு வாய்க்காலை சீரமைத்து மேம்படுத்துவதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து கட்டளை மேட்டு வாய்க்காலை சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை ரூ.335 கோடியில் நிறைவேற்றி முடிக்க தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான உத்தரவு கடந்த மாதம் 21-ந்தேதி பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் படி மாயனூர் முதல் தாயனூர் வரை கட்டளை மேட்டு வாய்க்காலின் கரைகள் சிமெண்டு சாய்வு தளம் அமைத்து பலப்படுத்தப்படும். இந்த வாய்க்காலில் மதகுகள், நீர் வெளியேற்றும் கருவிகள், நீர் உள் வாங்கும் கருவிகள், நீர்ப்போக்கிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மொத்தம் 174 உள்ளன. இவற்றில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டமைப்புகள் முற்றிலுமாக மாற்றப்படும். ஓரளவு சரி செய்யக்கூடிய கட்டமைப்புகளின் பழுதுகள் நீக்கப்பட்டு சரி செய்யப்படும்.
மேலும் வாய்க்காலின் மேல் பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையிலான பாலங்கள், நடைபாதை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் செய்து ஒட்டுமொத்தமாக கட்டளை மேட்டு வாய்க்கால் நவீனப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதல் கட்டமாக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கட்டளை மேட்டு வாய்க்கால் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் அதன் கடைமடை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாசனம் செய்ய முடியாத அளவிற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் கட்டளை மேட்டு வாய்க்கால் சீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படுவதால் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி வினாடிக்கு 411 கன அடி வீதம் தண்ணீர் கிடைக்கும். 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பாசன மேம்பாடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் கூறுகையில் ‘முதல் கட்ட பணிக்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. காவிரியில் தற்போது பாசனத்திற்காக வழங்கப்பட்டு வரும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந்தேதி நிறுத்தப்படும். அதனைத்தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் கட்டளை மேட்டு வாய்க்காலை நவீனப்படுத்தும் பணிகள் தொடங்கும்’ என்றார்.