சங்கரன்கோவிலில் மூதாட்டி கொலை வழக்கில் பெண் கைது போலீசார் தீவிர விசாரணை

சங்கரன்கோவிலில் மூதாட்டி கொலை வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-12-06 22:00 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் மூதாட்டி கொலை வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 75). இவர் சங்கரன்கோவிலில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இதனால் சந்திரனும், ராஜேஸ்வரியும், தங்கள் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சந்திரன் வெளியூருக்கு சென்று விட்டார். ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் தான் வெளியே செல்வதாக வீட்டை பூட்டி சாவியை ராஜேஸ்வரியிடம் கொடுக்க வந்தார். அப்போது ராஜேஸ்வரி தலையில் அடித்தும், தீவைத்து எரித்தும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பெண் கைது

இதுதொடர்பாக போலீசார் 2 தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் ராஜேஸ்வரியின் வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கொலை நடந்த நேரத்தில் ஒரு பெண் அந்த பகுதியில் நடந்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அவர் சங்கரன்கோவில் சங்கர் நகர் 1-வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி விஜயலட்சுமி (51) என்பதும், ராஜேஸ்வரியை கொலை செய்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து, சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை பாளையங்கோட்டை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

மேலும் காணாமல் போன 11 பவுன் நகைகள் குறித்தும், விஜயலட்சுமி எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்