உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்
உப்பள்ளியில், கிறிஸ்தவ பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய உடலை கொலை காரர்கள் துண்டு, துண்டாக வெட்டி ரெயில் தண்டவாளத்தில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.;
தார்வார்,
உப்பள்ளியில், கிறிஸ்தவ பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய உடலை கொலை காரர்கள் துண்டு, துண்டாக வெட்டி ரெயில் தண்டவாளத்தில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கிறிஸ்தவ பெண் துறவி
கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருசாந்தப்பா. இவரது மனைவி கோசு மரியா. இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள். அதில் 2-வது மகள் தான் மேரி சேண்ட்ரா வியன்னா(வயது 26). கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த குருசாந்தப்பாவும், கோசு மரியாவும் மேரி சேண்ட்ராவை மைசூருவில் உள்ள கிறிஸ்தவ பெண் துறவிகள் அமைப்பில் சேர்த்தனர். அங்கு பெண் துறவியாக பயிற்சி பெற்ற மேரி சேண்ட்ரா, பின்னர் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு சொந்தமான பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
மேலும் அவர் கிறிஸ்தவ மத போதனைகளிலும் ஈடுபட்டு வந்தார். கலபுரகி, பெலகாவி, கதக், மைசூரு ஆகிய மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளுக்கு சொந்தமான பள்ளிகளில் அவர் பணியாற்றினார்.
மாயமானார்
கடைசியாக அவர் உப்பள்ளியில் உள்ள திரு இருதய இயேசு பேராலயத்தில் போதகராகவும், செயிண்ட் மேரி ஆங்கில பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மாயமானார். அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்தது. இதுபற்றி உப்பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேரி சேண்ட்ராவை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மேரி சேண்ட்ரா உப்பள்ளி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய உடலை துண்டு, துண்டாக வெட்டி கொலைகாரர்கள் வீசியிருந்தனர்.
படுகொலை
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேரி சேண்ட்ரா எதற்காக படுகொலை செய்யப்பட்டார்?, அவர் கற்பழித்து கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான கிறிஸ்தவ பெண் துறவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.