தோல்வி அடையும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி இல்லை மந்திரி ஈசுவரப்பா பேட்டி
இடைத்தேர்தலில் தோல்வி அடையும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி இல்லை என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.;
பெங்களூரு,
இடைத்தேர்தலில் தோல்வி அடையும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி இல்லை என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாங்கள் உறுதியளித்தோம்
இடைத்தேர்தலில் பா.ஜனதா 15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. கருத்து கணிப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. இடைத்தேர்தலுக்கு முன்பே, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் மந்திரி பதவி வழங்குவதாக நாங்கள் உறுதியளித்தோம். ஆனால் அவர்கள் எங்கள் பேச்சை கேட்கவில்லை. எம்.எல்.ஏ. ஆகியே தீருவோம் என்றும், அதன்பிறகு மந்திரிகளாக உயர்ருவோம் என்றும் தெரிவித்தனர்.
அதனால் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா சார்பில் டிக்கெட் வழங்கியுள்ளோம். இடைத்தேர்தலில் வெற்றி பெறும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவது உறுதி. தோல்வி அடைபவர்களுக்கு மந்திரி பதவி வழங்க மாட்டோம். மேலும் யாருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கும் திட்டம் இல்லை. இதுபற்றி தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நிலையற்ற அரசியல்
வருகிற 9-ந் தேதி கர்நாடகத்தில் நிலையற்ற அரசியல் தன்மை முடிவுக்கு வரும். பா.ஜனதா முழு பெரும்பான்மை பலத்தை பெறும். தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், பா.ஜனதா ஆட்சி அமைந்திருக்காது. அதனால் அவர்களை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். அடுத்த 3½ ஆண்டுகளும் எடியூரப்பா முதல்-மந்திரியாக நீடிப்பார். கர்நாடகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.