வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு

வைர வியாபாரி நிரவ் மோடியை மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் கீழ் தப்பிஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-12-05 23:00 GMT
மும்பை, 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நிரவ் மோடியை மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் கீழ் தப்பிஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

வைர வியாபாரி நிரவ் மோடி

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). இவரது உறவினர் மெகுல் சோக்சி. இவர்கள் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் ரூ.14 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்தது கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இருவரும் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர்.

இந்த வங்கி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் 19-ந்தேதி கைது செய்யப்பட்டார். லண்டன் சிறையில் கம்பி எண்ணி வரும் அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

புதிய சட்டத்தின் கீழ்...

இதற்கிடையே மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொண்டு வந்த தப்பிஓடிய பொருளாதார குற்றவாளிகள் புதிய சட்டத்தின் கீழ் நிரவ் மோடியை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி வி.சி. பார்டே விசாரித்து வந்தார். விசாரணையின் போது, நிரவ் மோடியை புதிய சட்டத்தின் கீழ் தப்பிஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க அவரது வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

கோர்ட்டு அறிவிப்பு

ஆனால் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைர வியாபாரி நிரவ் மோடியை தப்பிஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து நேற்று உத்தரவிட்டார்.

புதிதாக கொண்டு வரப்பட்ட தப்பிஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட 2-வது நபர் நிரவ் மோடி ஆவார்.

சொத்துகளை விற்க முடியும்

ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் மோசடி செய்து நாட்டை விட்டு வெளியேறிய நபர் ஒருவர், நாடு திரும்ப மறுக்கும் பட்சத்தில் அவர் மீது மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த தப்பிஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கி பறிமுதல் செய்வதுடன் அவற்றை விற்பனை செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்