பா.ஜனதா தலைவர்களின் சர்க்கரை ஆலைக்கான கடன் உத்தரவாதம் வாபஸ் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனத்திற்கு முத்திரை கட்டண சலுகை ரத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நடவடிக்கை

பாரதீய ஜனதா தலைவர்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட கடன் உத்தரவாதத்தையும் ரத்து செய்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2019-12-05 23:30 GMT
மும்பை, 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ.1½ கோடி முத்திரை கட்டண சலுகையையும், பாரதீய ஜனதா தலைவர்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட கடன் உத்தரவாதத்தையும் ரத்து செய்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுத்து உள்ளார்.

முத்திரை கட்டண சலுகை ரத்து

மராட்டிய மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்தது. அப்போது, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான கடந்த பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி காலம் முடியும் நேரத்தில் எடுக்கப்பட்ட 34 முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முந்தைய அரசால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி வழங்கப்பட்ட முத்திரை கட்டண (ஸ்டாம்ப் டூட்டி) சலுகையை ரத்து செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

105 ஹெக்டேர் நிலம்

ஆர்.எஸ்.எஸ்.சின் கிளை அமைப்பான பாரதீய சிக்சான் மண்டல் மறுமலர்ச்சியின் அடிப்படைக்கான ஆராய்ச்சி என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இந்த கல்வி நிறுவனத்திற்காக 105 ஹெக்டேர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்திற்கு முந்தைய பட்னாவிஸ் தலைமையிலான அரசு ரூ.1½ கோடி முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டண சலுகை வழங்கி இருந்தது. அந்த சலுகையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தற்போது ரத்து செய்து உள்ளார்.

சலுகை ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கல்வி நிறுவனத்திற்காக நிலம் வாங்கியதற்கான முத்திரை கட்டணத்தை செலுத்த வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சர்க்கரை ஆலைகள்

இதேபோல மந்திரி சபை கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர்கள் 7 பேருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை வாங்கி உள்ள ரூ.300 கோடி கடனுக்கு வழங்கி வந்த கடன் உத்தரவாதத்தையும் மாநில அரசு ரத்து செய்து உள்ளது. 7 சர்க்கரை ஆலைகளுக்கும் கடன் உத்தரவாதம் வழங்குவது தொடர்பாக சட்டசபை தேர்தலுக்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் பட்னாவிஸ் தலைமையிலான அரசு முடிவு செய்து இருந்தது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகங்கள் சர்க்கரை ஆலைகளுக்கு கடன் வழங்கி வருகின்றன. சா்க்கரை ஆலைகள் வாங்கும் அந்த கடனுக்கு மாநில அரசு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்கு கடன் உத்தரவாதம் அளிக்கும். 7 சர்க்கரை ஆலைகளும் அந்த நிபந்தனைகளை பின்பற்றாததால் அவா்களுக்கு வழங்கி வந்த கடன் உத்தரவாதத்தை மாநில அரசு ரத்து செய்து உள்ளது” என்றார்.

பாரபட்சம் இல்லை

கடன் உத்தரவாதம் ரத்து செய்யப்பட்ட சர்க்கரை ஆலைகள் முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனசுயராஜ்ய சக்தி கட்சி தலைவர் வினய் கோரேக்கு சொந்தமானதாகும்.

இதற்கிடையே உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு யார் மீதும் பாரபட்சமான முறையில் நடவடிக்கை எடுக்காது என மாநில மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்