பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-12-05 22:15 GMT
திருப்பூர்,

பாபர் மசூதி இடிப்பு தினமான (டிசம்பர் 6) இன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரிலும் நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் 2 துணை போலீஸ் கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட மொத்தம் 982 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வழிபாட்டு தலங்கள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் நான்கு சக்கர வாகனங்களில் ரோந்துப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

மாநகரின் முக்கிய பகுதிகளில் பிக்கெட்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி திருப்பூரில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார். நேற்று இரவு அவர் மாநகரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணியை பார்வையிட்டார்.

இதுபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று போலீசார் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்து அனுப்பினார்கள். வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் உடமைகளை சோதனை செய்த பிறகே பயணிகளை ரெயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்