தினக்கூலி ஊழியர்களாக நியமிக்கக்கோரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் நாராயணசாமியுடன் சந்திப்பு

தினக்கூலி ஊழியர்களாக நியமிக்கக்கோரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினர்.;

Update: 2019-12-05 23:15 GMT
புதுச்சேரி, 

புதுவை அரசு பொதுப் பணித்துறையில் 1,311 வவுச்சர் ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதத்தில் 16 நாள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலியும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் மத்திய அரசு சட்டப்படி தினமும் ரூ.648 சம்பளம் வழங்க வேண்டும், முழுநேர தினக்கூலி ஊழியர்களாக நியமித்து பணி ஆணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பணிவழங்க மறுக்கப்பட்டது.

இதனை கண்டித்து அவர்கள் கடந்த சனிக்கிழமை சோனாம்பாளையம் குடிநீர் தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய முதல்-அமைச்சர், வருகிற புதன்கிழமை இது தொடர்பாக பேசி முடிவெடுக்கலாம் என உறுதி கூறினார்.

அதன்பேரில் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர். ஆனால் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி வவுச்சர் ஊழியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்த நிலையில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டின் முன்பு ஒன்று கூடினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மட்டும் நாராயணசாமியை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நாராயணசாமியிடம், அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் துறையின் அமைச்சரை சந்தித்து பேசுங்கள் என்று கூறினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்