தார் ரோட்டை சீரமைக்க கோரி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு
அந்தியூர் அருகே தார் ரோட்டை சீரமைக்க கோரி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் அறிவித்து உள்ளனர்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள கிராமங்கள் அண்ணமார்பாளையம், ஈச்சப்பாறை. இந்த கிராமங்களுக்கு இடையே உள்ள ரோடு கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது.
இந்த ரோட்டை சீரமைக்க கோரி அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்து உள்ளனர். மேலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகையை தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் வைத்து உள்ளனர். அந்த அறிவிப்பு பலகையில், ‘தார் ரோட்டை சீரமைக்காததை கண்டித்து வருகிற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் பதவி உள்பட எந்த பதவிக்கும் யாரும் போட்டியிட மனு செய்யப்போவதில்லை. யாரும் வாக்களிக்க போவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ள தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்,’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. தேர்தல் புறக்கணிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ள இந்த சம்பவத்தால் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.