தூத்துக்குடியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
தூத்துக்குடியில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.;
தூத்துக்குடி,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், இஸ்ரோ நில எடுப்பு உள்ளிட்ட அலுவலகங்களில் 34 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தகுதியான அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு உதவி தேர்தல் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு முன்தேதியிட்டு பிறப்பித்த பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வருவாய்த்துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தூர்ராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க துணைத்தலைவர்கள் ஞானராஜ், ஜஸ்டின், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.