நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார்: சிவமொக்காவில் 25 தனியார் ஆம்புலன்சுகள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை
நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின்பேரில், சிவமொக்காவில் 25 தனியார் ஆம்புலன்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவமொக்கா,
நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின்பேரில், சிவமொக்காவில் 25 தனியார் ஆம்புலன்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நோயாளிகளிடம் லஞ்சம்
சிவமொக்கா டவுன் பி.எச்.சாலையில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அமைந்து உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 2 ஆம்புலன்சுகள் தான் உள்ளது என்று தெரிகிறது.
இதனால் நோயாளிகள் பெரும்பாலும் ஆஸ்பத்திரியின் எதிர்புறம் நிறுத்தப்பட்டு இருக்கும் தனியார் ஆம்புலன்சுகளில் தான் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த நிலையில் நோயாளிகளை அழைத்து செல்லும் போது ஆம்புலன்சு டிரைவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாகவும் தொட்டபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
25 ஆம்புலன்சுகள் பறிமுதல்
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியின் எதிரே ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு போலீசார் சென்றனர். மேலும் ஆம்புலன்சு ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் ஆகியவற்றை போலீசார் பார்த்தனர். அப்போது ஆவணங்கள் சரியான முறையில் இல்லாதது தெரியவந்தது.
மேலும் நோயாளிகளிடம் ஆம்புலன்சு டிரைவர்கள் லஞ்சம் பெற்று கொண்டதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து 25 ஆம்புலன்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆம்புலன்சு டிரைவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.