பொது பணித்துறை சார்பில்: எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி 200-வது ஆண்டு நிறைவு விழா - 500 மரக்கன்றுகள் நடப்பட்டது
எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் 200-வது ஆண்டு நிறைவு விழா பொது பணித்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.
சென்னை,
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் ஆஸ்பத்திரி 200 ஆண்டுகள் பழமையானதாகும். இதையடுத்து ஆஸ்பத்திரியின் 200-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் கண் ஆஸ்பத்திரியில் நினைவு வளைவு, புதுப்பிக்கப்பட்ட எலியட்ஸ் அருங்காட்சியகம், முப்பரிமான வெட் லேப் ஆகியவை திறக்கப்பட்டது.
மேலும் 200-வது ஆண்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. இதையடுத்து நிறைவு விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையிலும், உலக மண் தினத்தை முன்னிட்டும் பொது பணித்துறை சார்பில் நேற்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு தலைமை தாங்கினார். அரசு கண் ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரகாஷ் மற்றும் பொதுப் பணித்துறையின் என்ஜினீயர் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் இயற்கையை பேணி காக்கும் விதமாக, வேம்பு உள்ளிட்ட 500 நாட்டு மரக்கன்றுகள், மருத்துவமனை வளாகம் முழுவதும் நடப்பட்டது.
உதவி என்ஜினீயர் முத்தமிழ் மற்றும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.