ஆசிரியை தற்கொலைக்கு முயன்றதால் நடவடிக்கை: தலைமை ஆசிரியை பணிக்கு திரும்பக்கோரி மாணவர்கள் போராட்டம்
சிவகங்கை அருகே ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை மீண்டும் பணிக்கு வரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியையாக கீதாஞ்சலி பணிபுரிந்து வந்தார். அறிவியல் ஆசிரியையாக சங்கீதா என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை தலைமை ஆசிரியை திட்டியதால் வேதியியல் ஆய்வகத்தில் இருந்த திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பள்ளி தலைமை ஆசிரியையை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கிராம மக்கள் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மனு கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் தலைமை ஆசிரியை நேற்று பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அறிவியல் ஆசிரியை சங்கீதா மற்றும் தலைமை ஆசிரியை கீதாஞ்சலி இருவரும் மீண்டும் பள்ளிக்கு வரக்கோரி பள்ளி வாயிலில் அமர்ந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மாணவர்களிடம் பேசி மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.