மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான சம்பவம்: விபத்துக்கு காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான சம்பவத்துக்கு காரணமான தடுப்புச்சுவரின் மீதமுள்ள பகுதி இடித்து அகற்றப்பட்டது.;

Update: 2019-12-05 22:45 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி காலனியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். ஜவுளிக்கடை உரிமையாளர். சம்பவத்தன்று அந்தப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக சிவசுப்பிரமணியம் வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது. இதில் வீடுகள் இடிந்து அதற்குள் தூங்கிக்கொண்டு இருந்த 17 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த கோர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை யும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் வீடுகள் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இந்தநிலையில் 17 பேர் இறந்தது தொடர்பாக சிவசுப்பிரமணியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆபத்தாக காணப்படும் தடுப்புச்சுவர்களை இடித்து அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, விபத்துக்கு காரணமாக தடுப்புச்சுவரில் இடிந்து விழுந்தது போக, ஆபத்தாக காணப்படும் மீதமுள்ள சுவரையும் இடித்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, தடுப்புச்சுவரை இடித்து அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. அப்போது கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், அனிதா, போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஆபத்தாக காணப்பட்ட 252 அடி நீள சுவர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.

இதையடுத்து சிவசுப்பிரமணியம் வீட்டின் அருகே உள்ள தங்கவேல், ராஜேந்திரன் ஆகியோரின் வீட்டின் தடுப்புச்சுவர்களையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களிடம், கோவை ஆர்.டி.ஓ. சுரே‌‌ஷ், தாசில்தார் சாந்தாமணி, நகராட்சி ஆணையர் சுரே‌‌ஷ்குமார், பொறியாளர் கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அந்த வீட்டு உரிமையாளர்கள் தரப்பில் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும் தங்கவேல், ராஜேந்திரன் ஆகியோரின் வீட்டின் தடுப்புச்சுவர்களும் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்