கோவையில், 500 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற 2 வாலிபர்கள் கைது

கடையில் ெபாருட்கள் வாங்குவதுபோல் 500 ரூபாய் கள்ள நோட்டைமாற்ற முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-05 22:15 GMT
கோவை,

கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் அருகே சிப்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு 2 வாலிபர்கள் வந்து சில பொருட்களை வாங்கி விட்டு கடை உரிமையாளரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அதை கடை உரிமையாளர் வாங்கி பார்த்த போது அந்த ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் அது கள்ளநோட்டு என்பதும் தெரியவந்தது. இது குறித்து அவர், அந்த வாலிபர்களிடம் கேட்ட போது அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இது குறித்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தப்பி ஓட முயன்ற 2 பேரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர்கள் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ரசல் பிரான்சிஸ் (வயது 28), தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வடகரையை சேர்ந்த பாஸ்கர் (35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

போலீசாரிடம் ரசல் பிரான்சிஸ் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் பி.டெக் படித்து விட்டு பணம் பரிமாற்றம் செய்யும் வேலை செய்து வந்தேன். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்காததால் சீக்கிரம் பணம் சம்பாதித்து பணக்காரனாக ஆசைப்பட்டு ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்றேன். அங்கு பாஸ்போர்ட் பிரச்சினையில் சிக்கி ஓமன் போலீசாரால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டேன். இங்கும் ஒரு வழக்கில் சிறையில் இருந்தேன்.

அப்போது பாஸ்கருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் விடுதலையாகி சொந்த ஊருக்கு வந்தோம். பின்னர் நாங்கள் அடிக்கடி கோவையில் சந்தித்து கள்ளநோட்டுகளை கடையில் கொடுத்து மாற்றினோம். தற்போது ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக கள்ள ரூபாய் நோட்டை மாற்றும்போது மாட்டிக்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர்களிடம் கள்ள நோட்டு எப்படி வந்தது? கோவையில் இது போன்று வேறு எங்கேயாவது கள்ள நோட்டுகளை மாற்றினார்களா? கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்