கார்த்திகை தீபத்திருவிழா: 9–ந் முதல் 12–ந் தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்கம் - கலெக்டர் தகவல்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 9–ந் தேதி முதல் 12–ந் தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் 10–ந் தேதி நடக்கிறது. மேலும் மறுநாள் 11–ந் தேதி காலை 11.10 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 12–ந் தேதி காலை 11.05 மணிக்கு நிறைவடைகிறது.
பக்தர்களின் வசதிக்காக 9–ந் தேதி முதல் 12–ந் தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 10 மற்றும் 11–ந் தேதி காலை 9.20 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம் மற்றும் தண்டரை ரெயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை காலை 11 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், அங்கிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே சென்று விழுப்புரம் ரெயில் நிலையத்தை பிற்பகல் 3 மணிக்கு சென்றடைகிறது.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரெயில் நிலையத்தில் 9 மற்றும் 10–ந் தேதி இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் ரெயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை இரவு 11.08 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு போளூர் ரெயில் நிலையம், ஆரணி சாலை வழியாக வேலூர் கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை நள்ளிரவு 1 மணிக்கு சென்றடைகிறது.
இதேபோல் வேலூர் கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் 10 மற்றும் 11–ந் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. ஆரணி சாலை, போளூர் ரெயில் நிலையம் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை அதிகாலை 3.02 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து அதிகாலை 3.04 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே சென்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரெயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து 9, 10 மற்றும் 11–ந் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் வேலூர் கன்டோன்மெண்டுக்கு இரவு 9.45 மணிக்கு வருகிறது. அங்கிருந்து கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் ரெயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை இரவு 11.25 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து 10, 11 மற்றும் 12–ந் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே சென்று வேலூர் கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10 மணிக்கு சென்றடைகிறது.
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11–ந் தேதி இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ரெயில் நிலையம் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை இரவு 11.30 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து 10, 11 மற்றும் 12–ந் தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே சென்று விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது.
ஹவுராவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் 10–ந் தேதி அதிகாலை 5.22 மணிக்கு நிறுத்தப்பட்டு, 5.23 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இதேபோல் புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் 11–ந் தேதி பிற்பகல் 2.48 மணிக்கு நிறுத்தப்பட்டு, 2.49 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. அதேபோல் தினசரி நாட்களில் இயங்கும் வழக்கமான ரெயில்களும் இயங்கும். இந்த சிறப்பு ரெயில் போக்குவரத்து வசதிகளை பொதுமக்களும், பக்தர்களும் சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.