கொரடாச்சேரி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் சாவு

கொரடாச்சேரி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-03 23:15 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்து வருகின்றன.

கொரடாச்சேரி அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன்(வயது 80). விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

சுவர் இடிந்து விழுந்து சாவு

அப்போது வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி செல்லையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் செல்லையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

சம்பவம் நடந்த இடத்துக்கு குடவாசல் தாசில்தார் பரஞ்சோதி மற்றும் அதிகாரிகள் சென்று சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த செல்லையனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், திருமணமான 2 மகள்களும் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை 160 வீடுகள் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்