பாசன வாய்க்காலை தூர்வாரக்கோரி, விவசாயிகள் திடீர் சாலை மறியல் - விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே பாசன வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரிக்கு திட்டக்குடி வெலிங்டன் ஏரியில் இருந்து கடைமடை பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும். இந்நிலையில் அந்த பாசன வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி தற்போது தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் வெலிங்டன் ஏரியில் இருந்து வரும் தண்ணீர் பாசன வாய்க்காலில் செல்வது தடைபட்டுள்ளது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஏரி நிரம்பாததால், அப்பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாசன வாய்க்காலை தூர்வாரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டும் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தும், மருங்கூர் ஏரி இன்னும் நிரம்பாமல் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராஜவன்னியன் தலைமையில் வெலிங்டன் ஏரியின் கடைமடை பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரக்கோரி விருத்தாசலம்- பவழங்குடி சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரும்பு விவசாய சங்க செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், ஸ்ரீஅம்பிகா சர்க்கரை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பஞ்சமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து சமாதான கூட்டம் நடத்தி முடிவெடுக்கலாம் என்றனர்.
அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் விருத்தாசலம்- பவழங்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.