வளர்ப்பு நாய் விபத்தில் சிக்கியதால் விரக்தி: தொழில் அதிபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

வளர்ப்பு நாய் விபத்தில் சிக்கியதால் விரக்தி அடைந்த தொழில் அதிபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-11-30 22:45 GMT
சூலூர், 

கோவை பாப்பம்பட்டி பிரிவு செல்வராஜபுரத்தை சேர்ந்தவர் கூடலிங்கம் (வயது 40). தொழில் அதிபரான இவர் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். லட்சுமி, மிகவும் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள சாலையில் லட்சுமியின் வளர்ப்பு நாய் ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் அடிபட்டு வளர்ப்பு நாய் படுகாயம் அடைந்தது. இதனால் லட்சுமி மிகுந்த மனவருத்தத்தில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியறைக்குள் சென்ற லட்சுமி கதவை சாத்தி கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கூடலிங்கம் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்பட வில்லை. இதையடுத்து கூடலிங்கம் அங்கிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஜமானருக்காக வளர்ப்பு நாய் உயிரை விடுவதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் வளர்ப்பு நாய் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் விரக்தி அடைந்த தொழில் அதிபர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்