சிவசேனா கூட்டணிக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது

சிவசேனா கூட்டணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை கோர்ட்டால் தடுக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்து உள்ளது.

Update: 2019-11-29 23:57 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டு ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதற்கு மத்தியில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ‘மகா விகாஷ் முன்னணி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்து உள்ளது.

இந்த அரசு அமைவதற்கு முன்னதாக அகில பாரதீய இந்து மகாசபை அமைப்பை சேர்ந்த பிரமோத் பண்டித் ஜோஷி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தேர்தலின் போது பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்த சிவசேனா தேர்தலுக்கு பிறகு வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் முடிவுக்கு எதிராக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

அரசியலமைப்பு நெறிமுறைகளில் இருந்து அரசியல் நெறிமுறை வேறுபட்டது. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை நாங்கள் தடுக்க முடியாது.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்த முடிவில் கோர்ட்டு தலையிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். கோர்ட்டுக்கு அந்த அதிகாரம் கிடையாது. இதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆட்சிக்கு வருவதற்காக தேர்தல் அறிக்கையில் ஒரு கட்சி தெரிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறினர்.

மேலும் செய்திகள்