விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி
விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் தமிழக அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசப் ஆண்டனி ஆண்டோ (வயது 60). இவர் கடந்த 26.8.2012 அன்று காரைக்காலில் இருந்து சென்னைக்கு காரில் சென்றார். திண்டிவனம் அருகே சென்றபோது எதிரே வந்த தமிழக அரசு பஸ் ஜோசப் ஆண்டனி ஆண்டோவின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார்.
ஜோசப் ஆண்டனி ஆண்டோ இறப்புக்கு இழப்பீடு வழங்குமாறு அவரது குடும்பத்தினர் காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை.
இதையடுத்து இழப்பீடு வழங்கக்கோரி காரைக்கால் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கார்த்தி கேயன் வட்டியுடன் சேர்த்து ரூ.22 லட்சத்து 67 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அதன்பிறகும் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய காரைக்கால் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் கோர்ட்டு ஊழியர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் காரைக்கால் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த தமிழக அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.