மதுரை பழங்காநத்தத்தில் ‘ஜாக்கி' தொழில்நுட்பத்தில் பழமையான சாவடியை உயர்த்தும் பணி

மதுரை பழங்காநத்தத்தில் ‘ஜாக்கி’ தொழில் நுட்பத்தில் பழமையான சாவடியை உயர்த்தும் பணி நடந்து வருகிறது.

Update: 2019-11-29 21:45 GMT
மதுரை, 

மதுரை பழங்காநத்தம் தெற்குத்தெருவில் பொதுச்சாவடி உள்ளது. இந்த சாவடி 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. முற்றிலும் கல் தூண்களால் கட்டப்பட்ட இந்த சாவடி சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. பராமரிப்பில்லாமல் காணப்பட்ட இந்த சாவடியில் சமூகவிரோதிகளின் செயல்பாடுகள் அதிகமானது. இதைதொடர்ந்து அந்த சாவடியை சுற்றிலும் கம்பிவேலி அமைத்து, முளைப்பாரி மண்டபமாக மாற்றப்பட்டது.

மேலும் சாவடியை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்ததத்தின்படி, சாவடியை தரைமட்டத்தில் இருந்து ‘ஜாக்கி' தொழில்நுட்பம் மூலம் அதன் உயரத்தை மட்டும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, கடந்த சில நாட்களாக இதற்கான பணி நடந்து வருகிறது. இதுகுறித்து அந்த கட்டுமான நிறுவனத்தினர் கூறும்போது, பொதுச்சாவடியின் அடிப்பகுதியை ஜாக்கி மூலம் தூக்கி தேவையான அளவுக்கு உயரத்தில் நிறுத்தப்படும். அதன் பின்னர் கான்கிரீட் மற்றும் செங்கல்கள் வைத்து கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்த பின்னர், சாவடி மண்டபம் புதுப்பிக்கப்படும் என்றனர். மதுரையில் ஏற்கனவே நாராயணபுரம் பகுதியில் ஒரு கோவிலை இடிக்காமல் சில அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. தற்போது பழங்காநத்தம் பழமையான சாவடி மண்டபம் இடிக்கப்படாமல் ‘ஜாக்கி' தொழில்நுட்பத்தில் உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்